search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "அவகாசம் நீட்டிப்பு"

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரணை நடத்தி வரும் ஆறுமுகசாமி ஆணையத்தின் காலம் மேலும் 4 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    சென்னை:

    ஜெயலலிதா மரணம் தொடர்பாக ஓய்வுபெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான ஆணையம் விசாரணை நடத்தி வருகிறது.  விசாரணை ஆணையத்தின் காலம் 3 மாதங்கள் என முதலில் நிர்ணயிக்கப்பட்டது. 3 மாதங்களுக்குள் விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என கூறப்பட்டது.



    அதன்படி கடந்த 2017-ஆம் ஆண்டு செப்டம்பர் 24-ஆம் தேதி நீதிபதி ஆறுமுகசாமி விசாரணையைத் தொடங்கினார். இந்த விசாரணை ஆணையத்தில் சசிகலாவின் உறவினர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர்கள், காவல் துறை அதிகாரிகள், அரசு மருத்துவர்கள், ஜெயலலிதாவின் உதவியாளர்கள், அவரது வீட்டில் பணிபுரிந்தவர்கள், சிகிச்சை அளித்த டாக்டர்கள் என பல்வேறு தரப்பினரும் ஆஜராகி விளக்கம் அளித்தனர். சாட்சியம் அளித்தவர்களிடம் சசிகலா தரப்பு வழக்கறிஞர்கள் குறுக்கு விசாரணை நடத்தினர்.

    ஆனால் குறிப்பிட்ட காலத்துக்குள் விசாரணை முடிவடையாத காரணத்தால் ஆணையத்தின் காலம் முதலில் 6 மாத காலம் நீட்டிக்கப்பட்டது. அதன்பின்னர் இரண்டு முறை தலா 4 மாதம் கால நீட்டிப்பு வழங்கப்பட்டது. அதன்படி 2019, பிப்ரவரி 24ம் தேதிக்குள் விசாரணையை முடித்திருக்க வேண்டும். ஆனால், இந்த காலத்திற்குள் விசாரணை நிறைவடையவில்லை. எனவே, ஆணையத்தின் வேண்டுகோளை ஏற்று, ஆணையத்தின் காலத்தை மேலும் 4 மாதத்திற்கு நீட்டித்து அரசு தற்போது உத்தரவு பிறப்பித்துள்ளது.

    இந்த அவகாசத்திற்குள் ஆணையம் தனது விசாரணையை முடித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று அரசு கூறியுள்ளது.  இதன்மூலம் ஆறுமுகசாமி ஆணையத்திற்கு 4-வது முறையாக கால நீட்டிப்பு வழங்கப்பட்டுள்ளது. #JayaDeathProbe #ArumugasamyCommission
    பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட அ.தி.மு.க.வில் விருப்ப மனு அளிப்பதற்கு 14-ந்தேதி வரை காலஅவகாசம் வழங்கப்பட்டுள்ளது. #ParliamentElection #ADMK
    சென்னை:

    பாராளுமன்ற தேர்தல் தேதி அறிவிக்கும் முன்னரே தேர்தலை சந்திப்பதற்கான ஆயத்தப் பணிகளை அ.தி.மு.க. மேற்கொண்டுள்ளது. அதன்படி அ.தி.மு.க. சார்பில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் போட்டியிட விரும்பும் கட்சியினரிடம் இருந்து கடந்த 4-ந்தேதி முதல் விருப்ப மனு பெறப்பட்டது.

    சென்னை ராயப்பேட்டையில் உள்ள அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் ரூ.25 ஆயிரம் கட்டணம் செலுத்தி கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் விருப்ப மனுக்களை வாங்கி சென்று, பூர்த்தி செய்து சமர்பித்தனர்.

    துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மகன் ரவீந்திரநாத் குமார், தற்போதைய அ.தி.மு.க. எம்.பி.க்கள், முன்னாள் எம்.பி.க்கள், முன்னாள் அமைச்சர்கள், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் என பலரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிட ஆர்வத்துடன் மனுத்தாக்கல் செய்தனர்.

    விருப்ப மனு தாக்கல் செய்வதற்கு 10-ந்தேதி (அதாவது, நேற்று) கடைசி நாளாக அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தநிலையில் நேற்று மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமாரின் மகனும், அ.தி.மு.க. எம்.பி.யுமான டாக்டர் ஜெ.ஜெயவர்தன் மீண்டும் தென்சென்னை தொகுதியில் போட்டியிட விருப்ப மனு அளித்தார்.

    எம்.பி.க்கள் டி.ஜி.வெங்கடேஷ்பாபு, எஸ்.ஆர்.விஜயகுமார், ஈரோடு முன்னாள் மேயர் மல்லிகா பரமசிவம், அ.தி.மு.க. எம்.எல்.ஏ. ஜக்கையன் மகன் பாலு மணிமார்பன், சிறுபான்மை பிரிவு நிர்வாகி லியாகத் அலிகான் உள்பட பலரும் நேற்று போட்டி போட்டு விருப்ப மனு அளித்தனர். இதன் காரணமாக சென்னை அ.தி.மு.க. தலைமை அலுவலகம் நேற்று தொண்டர்கள் கூட்டத்தால் களைக்கட்டியது.

    இந்தநிலையில் அ.தி.மு.க.வில் விருப்ப மனுத்தாக்கல் செய்வதற்கான காலஅவகாசம் 4 நாட்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது.



    இதுதொடர்பாக அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளரும், முதல்-அமைச்சருமான எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்ட அறிவிப்பில், ‘அ.தி.மு.க. சார்பில் விருப்ப மனு பெறும் கால அளவை நீட்டித்து தருமாறு கட்சி நிர்வாகிகளும், தொண்டர்களும் தொடர்ந்து விடுத்து வரும் வேண்டுகோளை ஏற்று, அ.தி.மு.க.வினர் தங்களுடைய விருப்ப மனுக்களை வருகிற 14-ந்தேதி(வியாழக்கிழமை) மாலை 5 மணி வரை வழங்கலாம்.’ என்று தெரிவித்துள்ளனர்.

    அ.தி.மு.க.வில் கடந்த 4-ந்தேதி தொடங்கி நேற்று வரை 7 நாட்கள் விருப்ப மனு வினியோகம் நடந்துள்ளது. 40 தொகுதிகளுக்கும் விருப்ப மனு பெறப்பட்டது. இதுவரையில் மொத்தம் 1,400 பேர் போட்டியிட மனு அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. #ParliamentElection #ADMK
    அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்ப்பது தொடர்பாக விண்ணப்பிக்கும் கால அவகாசத்தை உச்ச நீதிமன்றம் மேலும் நீட்டித்துள்ளது. #AssamNRC #SupremeCourt
    புதுடெல்லி:

    அசாம் மாநிலத்தில் சட்டவிரோதமாக குடியேறிய வங்கதேசத்தவர்களை கண்டறியும் வகையில் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி) தயாரிக்கப்பட்டது. இதன் இறுதி வரைவு பட்டியல் கடந்த ஜூலை மாதம் வெளியிடப்பட்டது. இதில் 40 லட்சத்துக்கும் மேற்பட்டோரின் பெயர்கள் விடுபட்டது சர்ச்சையை ஏற்படுத்தியது. இதுபற்றி விளக்கம் அளித்த அசாம் அரசு, இந்த பட்டியலில் விடுபட்டவர்கள் பெயர்களை சேர்க்க அவகாசம் அளிப்பதாக கூறியது.

    இந்த விவகாரம் தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அசாம் தேசிய குடிமக்கள் பதிவேட்டில் விடுபட்ட மக்கள் தங்கள் பெயர்களை சேர்த்துகொள்ள செப்டம்பர் 25-ம் தேதி முதல் 60 நாட்கள் வரை அவகாசம் வழங்கினர்.

    இந்த அவகாசம் முடிவடைந்த நிலையில் இவ்வழக்கு இன்று தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய் தலைமையிலான அமர்வு முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது தேசிய குடிமக்கள் பதிவேட்டில் பெயர்களை சேர்க்க வழங்கப்பட்டுள்ள கால அவகாசத்தை டிசம்பர் 15-ம் தேதி வரை நீட்டித்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    பட்டியலில் விடுபட்டவர்கள் தங்கள் பெயர்களை சேர்ப்பதற்கான கோரிக்கைகளையும், தவறுகள் இருந்தால் அதற்கு ஆட்சேபனைகளையும் உரிய ஆவணங்களுடன் தெரிவிக்கலாம். 

    மேலும், மாநில ஒருங்கிணைப்பாளரால் நிராகரிக்கப்பட்ட, 1951ம் ஆண்டின் என்ஆர்சி சான்று, 1966 மற்றும் 1971ல் வழங்கப்பட்ட வாக்காளர் அடையாள அட்டைகள், 1971 வரையிலான அகதிகள் பதிவு சான்றிதழ் மற்றும் 1971 வரையிலான ரேசன் கார்டு ஆகிய 5 ஆவணங்களை என்ஆர்சி பதிவுக்கான ஆவணங்களாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

    மேலும், புதிதாக விண்ணப்பித்தவர்களுக்கு ஜனவரி 15-ம் தேதிக்குள் நோட்டீஸ் அனுப்பி, பிப்ரவரி 1-ம் தேதிக்குள் ஆவணங்களை சரிபார்க்க வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. #AssamNRC #SupremeCourt 
    கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
    சென்னை:

    பி.வி.எஸ்ஸி மற்றும் ஏ.எச்., பி.டெக் ஆகிய கால்நடை மருத்துவ படிப்புக்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்க வருகிற 18-ந் தேதி வரை கால அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.

    விண்ணப்பத்தினை பதிவிறக்கம் செய்து தகுந்த சான்றிதழ் நகல்களுடன் தலைவர், சேர்க்கைக்குழு, (இளநிலை பட்டப்படிப்பு) தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம், மாதவரம் பால் பண்ணை, சென்னை-51 என்ற முகவரிக்கு அன்று மாலை 5.45 மணிக்குள் கிடைக்குமாறு அனுப்ப வேண்டும்.

    இளநிலை பட்டப்படிப்புகளுக்கு 10,373 விண்ணப்பங்கள் ஆன் லைன் வழியாக சமர்ப்பிக்கப்பட்டுள்ளன. பிடெக் (உணவு தொழில் நுட்பம்) பிடெக் (கோழியின் உற்பத்தி தொழில் நுட்பம்) மற்றும் பிடெக் (பால்வளத் தொழில் நுட்பம்) ஆகிய படிப்புகளுக்கு விண்ணப்பதாரர்கள் ஒரே விண்ணப்பத்தின் மூலம் விண்ணப்பிக்க வேண்டும். கலந்தாய்வின் போது அவர்களின் தரவரிசைப்படி தமக்கு விருப்பமான தொழில் நுட்ப பட்டப்படிப்புகளை தேர்வு செய்யலாம் என்று சேர்க்கை குழு தெரிவித்துள்ளது.

    நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள் பத்தாம் வகுப்பு மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation
    சென்னை:

    தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் மீது போலீசார் துப்பாக்கி சூடு நடத்தியதில் 13 பேர் உயிரிழந்தனர். மேலும் பலர் பலத்த காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர்ந்து பதற்றமான சூழல் நிலவுவதால், தூத்துக்குடியில் 144 தடை உத்தரவு நீட்டிக்கப்பட்டுள்ளது. வன்முறை தொடர்பான தகவல்கள் பரவுவதை தடுக்கும் வகையில் தூத்துக்குடி, நெல்லை மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இணையதள சேவை முடக்கி வைக்கப்பட்டுள்ளது. 

    இதுபோன்ற காரணங்களால் மாணவர்கள் தேர்வுகளுக்கு தயாராக முடியாமலும், வெளியூர் செல்ல முடியாமலும் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். குறிப்பாக இணையதள சேவை முடக்கப்பட்டதால் எஸ்.எஸ்.எல்.சி. மாணவர்கள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    எனவே, மாணவர்களின் நலன் கருதி மறுகூட்டலுக்கு தமிழக அரசு கூடுதல் அவகாசம் அளித்துள்ளது. நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்த மாணவர்கள், தங்கள் பகுதிகளில் அமைதி திரும்பிய அடுத்த நாளில் இருந்து 3 நாட்களுக்குள் மறுகூட்டலுக்கு விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. #ThoothukudiShooting #10thRevaluation

    ×